சென்னை: ஆட்சிக்கு வந்த உடன் 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதாக அரசு கூறிய நிலையில், அவற்றில் எத்தனை கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன என்பதை விளக்கும் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், மதுரை திருப்பரங்குன்றத்தில் அரசு உத்தரவால் மூடப்பட்ட மூன்று டாஸ்மாக் கடைகளில் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அந்த கடையின் மதுக்கூட உரிமையாளர் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சலுகை கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் கூறப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கைகள் முதல்வர் விஜய்க்கு தெரியாமல் நடக்குமா என கேள்வி எழுப்பிய அவர், கட்சி நிர்வாகிகளுக்கு கடுமையான குற்றங்கள் மற்றும் சட்டவிரோத டாஸ்மாக் செயல்பாடுகளில் ஈடுபட சுதந்திரம் வழங்கப்படுகிறதா எனவும் குற்றம்சாட்டினார்.
முந்தைய அரசைப் போல வெற்று விளம்பரங்களில் ஆட்சி நடத்தாமல், ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மூடப்பட்ட கடைகளின் தற்போதைய நிலவரத்தை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





