புதுடில்லி: பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் (ATF) ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த சிறப்பு ஆதாய வரியில் தளர்வு அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் சூழ்நிலையால் உள்நாட்டில் எரிபொருள் கிடைப்பை உறுதி செய்யவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்றுமதியாளர்கள் அதிக ஆதாயம் பெறுவதைத் தடுக்கும் நோக்கிலும் இந்த வரி விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

புதிய திருத்தத்தின் படி, பெட்ரோல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.3 ஆக இருந்த கூடுதல் உற்பத்தி வரி ரூ.1.5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், டீசல் ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.16.50 இலிருந்து ரூ.13.50 ஆகவும், விமான எரிபொருள் ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.16 இலிருந்து ரூ.9.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும்.

உள்நாட்டு நுகர்வுக்காக விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தற்போதைய வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.