கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகள் போலியாக இடப்பட்டதாக கூறப்படும் கடிதம் தொடர்பான புகாரில், அக்கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு (மம்தா பானர்ஜியின் மருமகன்) சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சோபன்தேவ் சட்டோபாத்யாயாவை நியமிக்க ஆதரவு தெரிவித்து, எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டதாக கூறப்படும் கடிதம் சட்டசபை செயலரிடம் வழங்கப்பட்டதாக தகவல். ஆனால், ஒரு மூத்த தலைவரின் எம்.எல்.ஏ. பதவியேற்பு நேர கையெழுத்துக்கும், ஆதரவு கடிதத்தில் உள்ள கையெழுத்துக்கும் வேறுபாடு இருப்பதாக கூறி புகார் எழுந்தது.

சட்டசபை செயலர் தரப்பில் ஹரே தெரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சி.ஐ.டி. அதிகாரிகள் நயனா பானர்ஜி, சந்திரனாத் சின்ஹா, குணால் கோஷ், பஹருல் இஸ்லாம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்தினர். எதிர்க்கட்சி தலைவர் தேர்வு விவகாரத்தில் அபிஷேக் பானர்ஜியின் தலையீடு அதிகம் இருந்ததாக தெரிய வந்ததால், அவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சம்மன் வழங்க சி.ஐ.டி. அதிகாரிகள் ஹரிஷ் முகர்ஜி சாலையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால், காளிகாட் சாலையிலுள்ள மற்றொரு முகவரியில் நேரில் சம்மன் வழங்கப்பட்டது. அதில், நாளை மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அபிஷேக் பானர்ஜி, அரசியல் பழிவாங்கும் நோக்கில் சம்மன் அனுப்பப்பட்டதாக கூறி, முன்பும் பல விசாரணை அமைப்புகளின் விசாரணைகளை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். தற்போதைய விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையில், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட திரிணமுல் தொண்டர் குடும்பத்தினரை சந்திக்க சோனார்பூர் தெற்கு பகுதிக்கு சென்ற போது, உள்ளூர் மக்கள் அவரது காரை முற்றுகையிட்டு முழக்கமிட்டதாகவும், கற்கள், காலணிகள், முட்டைகள் வீசி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற நிலையில், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டதாக தகவல்.