புதுடில்லி: இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் கர்நாடக முதல்வர் பதவியேற்க உள்ள டி.கே.சிவக்குமார் ரூ.1,413 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளதாக, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் (ADR) வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிடப்பட்ட சொத்து விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டதாக ADR கூறியுள்ளது. சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, சிவக்குமார் ஜூன் 3-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

ADR கணக்கீட்டின்படி, சிவக்குமாரின் அசையா சொத்துகள் ரூ.1,140 கோடி, அசையும் சொத்துகள் ரூ.273 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.265 கோடி கடன் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் பதிவாகியுள்ளது.

அதே பட்டியலில் ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். தமிழக முதல்வர் விஜய் ரூ.648 கோடி சொத்துகளுடன் மூன்றாம் இடமும், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.332 கோடி சொத்துகளுடன் நான்காம் இடமும் பெற்றுள்ளனர்.

சிவக்குமாரின் சொத்து மதிப்பில் பெரும்பகுதி முன்னோர்கள் வழங்கிய நிலங்கள் மற்றும் முதலீடுகளுடன் தொடர்புடையதாக ADR குறிப்பிட்டுள்ளது. பெங்களூரு, மைசூரு, கனகபுரா, டில்லி ஆகிய இடங்களில் குடியிருப்புகள் மற்றும் பெங்களூரு கோபல்புராவில் வணிக வளாகம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலில் அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் ரூ.5,863 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் இருப்பதாகவும், மஹாராஷ்டிரா எம்எல்ஏ பராக் சிங் ரூ.3,383 கோடி சொத்துகளுடன் அடுத்த இடத்தில் இருப்பதாகவும், அந்த பட்டியலிலும் சிவக்குமார் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.