அமெரிக்கா–ஈரான் போர் எதிரொலியாக உரங்களின் விலை உயர்ந்து வருவதால், கோடை சாகுபடியை தொடங்க விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். செலவுகளை சமாளிக்க மாட்டுச் சாணம், மக்கிய உரம் போன்ற மாற்று உரங்களை நாடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து உரங்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டதுடன், மூலப்பொருட்கள் கிடைக்காததால் நாட்டிலுள்ள உர உற்பத்தி ஆலைகளிலும் உற்பத்தி குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதன் விளைவாக ரசாயன உரங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
தகவலின்படி பொட்டாஷ் உரம் ரூ.1,850-இல் இருந்து ரூ.2,250 ஆகவும், பாக்டம்பாஸ் ரூ.1,750-இல் இருந்து ரூ.2,150 ஆகவும், காம்ப்ளக்ஸ் ரூ.1,550-இல் இருந்து ரூ.2,200 ஆகவும், அமோனியம் சல்பைட் ரூ.1,200-இல் இருந்து ரூ.1,400 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேபோல் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் அதிகரித்துள்ளது. மேல்உரம், அடியுரம் உள்ளிட்ட உரப்பயன்பாடு மற்றும் பூச்சிக்கொல்லி தெளிப்பு செலவுகள் உயர்ந்ததால் சாகுபடி செலவு கூடிவிட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கோடை உழவு செய்துள்ள விவசாயிகள் பருத்தி, பாசி, உளுந்து, மக்காச்சோளம், சோளம், கம்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்ய தயக்கம் காட்டுகின்றனர். விதைப்புக்கு நிலங்களை தயார் நிலையில் வைத்திருந்தாலும், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விலை கடுமையாக உயர்ந்ததால் இந்தாண்டு சாகுபடியை தவிர்க்கலாம்; விலை உயர்வையும் மீறி சாகுபடி செய்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர்.




