ஷாங்ரி-லா மாநாட்டில் இந்தியாவின் பங்கு குறித்து பேசப்பட்டது

சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச ராணுவ மாநாடு ‘ஷாங்ரி-லா’வில், அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் அதிகார சமநிலையையும் பேண இந்தியாவின் ராணுவம் முக்கியத் தூணாக இருப்பதாக பாராட்டினார்.

இந்தியப் பெருங்கடலும் பசிபிக் பெருங்கடலும் இணையும் பரந்த கடற்பரப்பை உள்ளடக்கிய இந்தோ-பசிபிக், உலக அரசியல் மற்றும் வர்த்தகத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், சீனாவின் ராணுவ குவிப்பு மற்றும் ஆதிக்கப் போக்கு முக்கிய சவாலாக இருப்பதாகவும், தென் சீனக் கடல் உரிமைக் கோரிக்கைகள் மற்றும் கடலின் நடுவே செயற்கை தீவுகளை உருவாக்கி அவற்றை ராணுவ வசதிகளாக மாற்றும் நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்தார்.

தெற்காசியாவில் இந்தியா முக்கியப் பங்காற்றுவதாகவும், எல்லைப் பாதுகாப்பில் அதன் பங்கு அளப்பரியது என்றும் ஹெக்செத் கூறினார். இந்தியா தன் தேசிய நலன்களின் அடிப்படையில் செயல்படுவது, பிராந்திய அதிகார சமநிலையை நிலைநிறுத்தவும் கூட்டு இலக்குகளை முன்னெடுக்கவும் உதவுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியா ராணுவத்தை அதிநவீனமயமாக்கி வருவதையும், அதற்காக தொழில் துறை மற்றும் தளவாட கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதையும் சுட்டிக்காட்டினார். இந்தியாவுடன் இணைந்து கூட்டு தயாரிப்பில் ஈடுபட அமெரிக்கா உறுதியாக இருப்பதாக கூறிய அவர், பசிபிக் பகுதியில் ஆதிக்கம் நிலைபெற்றால் அது பிராந்திய அதிகார சமநிலையை குலைக்கும் என எச்சரித்தார்.