அமெரிக்க ஆளில்லா விமானம் (டிரோன்) ஒன்று ஈரான் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, அதை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனுடன், ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) வெளியிட்ட தகவலின்படி, இன்று அதிகாலை அமெரிக்க MQ-1 ரக டிரோனை ஈரான் வான் பாதுகாப்புப் படை ஏவுகணைகள் மூலம் அழித்ததாக கூறப்பட்டுள்ளது. ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட முயன்றபோது அது கண்டறியப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க தரப்பிலிருந்து உடனடியாக எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. மேலும், கடந்த 26ம் தேதி அமெரிக்க MQ-9 ரக டிரோனை சுட்டு வீழ்த்தியதாகவும், வான்வெளிக்குள் நுழைந்த போர் விமானம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் முன்பே உரிமை கொண்டாடியதை நினைவூட்டியுள்ளது.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிக மற்றும் போர்க்கப்பல்கள் அனைத்தும் ஈரான் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஜலசந்தியின் நிர்வாகம் முழுமையாக ஈரான் ஆயுதப்படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ராணுவம் தெரிவித்ததுடன், கப்பல்கள் நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், ஈரான் கடற்படையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது; விதிமீறல் ஏற்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நேரிடலாம் எனவும் கூறியுள்ளது.