ராஞ்சியைச் சேர்ந்த பிஐடி மெஸ்ரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இஸ்ரோ ஆதரவுடன் நிலவின் பள்ளங்களை மிகத் துல்லியமாக கண்டறிந்து ஆய்வு செய்யும் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

பல நாடுகள் நிலவு ஆய்வு திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், நிலவின் சிக்கலான தரைப்பரப்பை பகுப்பாய்வு செய்வது விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருந்து வருகிறது. அந்தப் பணிகளை எளிதாக்கும் நோக்கில் இந்த புதிய அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் சஞ்சிதா பால், டாக்டர் மிலி கோஷ் மற்றும் மிமான்சா சின்ஹா தலைமையிலான குழு, நிலவின் விரிவான தரைப்பரப்பு தகவல்களை கையாள ‘ஸ்மார்ட் நியூரல் நெட்வொர்க்குகள்’ எனப்படும் முறைகளை பயன்படுத்தி இந்தத் தீர்வை உருவாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேட்டர்மார்போ என்ற பிரத்யேக கருவி மூலம், சுமார் 200 மீட்டர் அளவிலான மிகச் சிறிய பள்ளங்களையும் கண்டறிவதுடன், அவற்றின் ஆழம் மற்றும் சுற்றியுள்ள தரைப்பரப்பின் கரடுமுரடுத் தன்மை போன்ற அளவீடுகளையும் கணக்கிட முடிகிறது.

நிலவின் மேடு-பள்ளங்கள் நிறைந்த மேற்பரப்பில் பாதுகாப்பான தரையிறங்கும் இடங்களைத் தேர்வு செய்யவும், எதிர்கால விண்வெளி ஆய்வுத் திட்டமிடலுக்கும் இது உதவக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.