மஹாராஷ்டிராவில் உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 33 பேர் கைது செய்யப்பட்டதுடன், 27 நிறுவனங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது.

உணவு பொருட்களில் கலப்படம் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக மும்பை, ஜல்கான், புனே, நாசிக் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.

ஜல்கான் மாவட்டத்தில் பாலில் சமையல் எண்ணெய் கலந்து விற்பனை செய்ததாக கூறப்படும் கும்பலை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். புனே மாவட்டத்தின் இந்தாபூர் பகுதியில் மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதை கண்டறிந்து, ரூ.20,000 மதிப்பிலான மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

பால்கர் மாவட்டத்தில் சுகாதாரமற்ற முறையில் இயங்கியதாக கூறப்படும் ஐஸ்கிரீம் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மும்பை தாராவி பகுதியில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நூடுல்ஸ் உற்பத்தி நிறுவனத்தின்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

FDA கமிஷனர் துக்காராம் முண்டே கூறுகையில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை, பாதுகாப்பற்ற உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பு விதிமீறல்களை கண்டறிவதே சோதனையின் முக்கிய நோக்கம் என்றார். இந்த நடவடிக்கையில் ரூ.20.67 லட்சம் மதிப்பிலான தடை/கலப்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், விதிமீறலில் ஈடுபடுவோர்மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். உணவு கலப்பட புகார்களை அளிக்க பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.