தமிழக முதல்வர் விஜய் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதே பயணத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமருடனான சந்திப்பு குறுகிய நேரம்தான் இருந்தாலும் பல விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்திப்பில் விஜயின் வெற்றியைப் பாராட்டிய பிரதமர், புதிய அமைச்சரவை செயல்பாடுகளை வலுப்படுத்த சில ஆலோசனைகள் வழங்கியதாக சொல்லப்படுகிறது. முதல்வர் உட்பட அமைச்சர்கள் பலரும் புதியவர்கள் என்பதால், அரசு இயங்கும் முறையைப் புரிந்துகொள்ள அமைச்சர்களுக்கான ஒருங்கிணைப்பு/அறிமுக ஆலோசனை கூட்டங்களை நடத்துவது பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறியதாக தகவல்.

மேலும், நிருபர்கள் அல்லது அறிமுகமில்லாதவர்களுடன் பேசும் போது மிகுந்த கவனம் தேவை என மோடி எச்சரித்ததாக கூறப்படுகிறது. ரகசியமாக பதிவு செய்து சிக்க வைக்கும் முயற்சிகள் நடக்கக்கூடும் என்பதால், இதை அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் தெரிவித்து எச்சரிக்கையுடன் செயல்படச் சொல்லுமாறு அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், “ஆனைமங்கல செப்பேடுகள்” தமிழகத்திற்கு விரைவில் அனுப்பப்படும்; அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விஜயின் நிதானம், அமைதியான அணுகுமுறை மற்றும் உடனடி பதிலளிக்காமல் யோசித்து பேசும் பழக்கத்தை பிரதமர் ரசித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.