புதுடில்லி: நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருவதால் மக்கள் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
மன்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், வெயிலில் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பிறகே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், சமீபத்தில் நெதர்லாந்து சென்ற போது சோழர் காலத்தைச் சேர்ந்த பழங்கால செப்புத் தகடுகள் இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்ட நிகழ்வை அவர் குறிப்பிட்டார். அந்த விழாவில் நெதர்லாந்து பிரதமரும் கலந்து கொண்டதாகவும், இந்தச் செய்தி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பெருமித உணர்வை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
நெதர்லாந்தில் சோழ மன்னர்களுடன் தொடர்புடைய 21 பெரிய மற்றும் 3 சிறிய செப்பேடுகள் இருப்பதாகவும், அதில் ஆனைமங்கலம் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மோடி தெரிவித்தார். இவை சோழர்களின் கடல் சாம்ராஜ்ய வலிமை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவுகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
அதே உரையில், மா சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளை அவர் பாராட்டினார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த தேசிய முதுநிலைத் தடகளப் போட்டிகளில் புதிய சாதனைகள் படைத்த வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். சமூக நற்பணிகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு பாராட்டவும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், இயன்றால் தாமும் நற்பணியில் ஈடுபடவும் அவர் மக்களை ஊக்குவித்தார்.





