புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த மனுவில் நலத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளுடன், மேகதாது அணை விவகாரம் தொடர்பான அம்சங்களும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த மனுக்களை ஆய்வு செய்து, மத்திய அரசு எந்த வகையில் நடவடிக்கை எடுத்து தமிழக அரசுக்கு உதவ முடியும் என்பதை குறிப்பெழுதி தெரிவிக்கும்படி, பிரதமர் அலுவலகத்தின் இரண்டாவது முதன்மை செயலர் சக்திகாந்த தாசுக்கு மோடி உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக கேடரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர். தற்போது பிரதமர் அலுவலகத்தில் இரண்டாவது முதன்மை செயலராக உள்ளார். மேலும், மத்திய அரசின் முக்கிய பதவியான கேபினட் செயலராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த டி.வி. சோமநாதனும் விஜயை சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமிழகத்திற்கு நிதி உதவி வழங்குவது குறித்து விஜய் ஆலோசனை நடத்தினார். அமைச்சகத்தில் பணியாற்றும் தமிழர்கள் உட்பட பலர் முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




