கேரளா பகுதிகளில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 31 மற்றும் ஜூன் 1 தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடிய கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் மே 31 அன்று இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஜூன் 2 மற்றும் 3 தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடிமின்னலுடன் கனமழை பெய்யலாம். ஜூன் 4 அன்று நெல்லை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் உள்ளிட்ட நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் பலத்த காற்று வீசக்கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேலும், இன்று அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் நிலவும் நிலையில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படலாம்; நகரின் சில பகுதிகளில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40–41 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்சம் 29–30 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.