பெங்களூரு: காங்கிரஸ் மேலிட உத்தரவின்படி, கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா மே 28 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய சட்டமன்றக் குழுத் தலைவரை தேர்வு செய்ய, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு பெங்களூரு விதான் சவுதாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் மற்றும் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக டி.கே. சிவகுமாரின் பெயரை சித்தராமையா முன்மொழிந்தார். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்ததால், சிவகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து சிவகுமார் ராஜ் பவனில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, தன்னை சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதன்படி, ஜூன் 3 அன்று கர்நாடகத்தின் புதிய முதல்வராக சிவகுமார் பதவியேற்கிறார். அதே நாளில் புதிய அமைச்சரவையும் பதவியேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





