நாட்டின் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தி, பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க அடுத்தாண்டுக்குள் ‘ஸ்மார்ட் எல்லை’ திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, நேபாளம், பூடான், மியான்மர் ஆகிய ஆறு அண்டை நாடுகளுடன் மொத்தம் 15,107 கி.மீ. நீள நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது. பல பகுதிகளில் சட்டவிரோத ஊடுருவல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட தேச விரோதச் செயல்கள் தொடரும் சவாலாக இருப்பதால், புதிய திட்டம் இவற்றை கட்டுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 26 முதல் கிழக்கு மற்றும் மேற்கு எல்லை மாநிலங்களை உள்ளடக்கிய பயணத்தில் அமித் ஷா எல்லை பாதுகாப்பு கட்டமைப்பு, பாதுகாப்புப் படையினரின் தயார் நிலை, பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) சார்பில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், எல்லை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாக அடுத்தாண்டுக்குள் ‘ஸ்மார்ட் எல்லை’ திட்டம் கொண்டு வரப்படும் என கூறினார்.
பஹல்காம் தாக்குதல் ஜம்மு-காஷ்மீர் எல்லை வழி ஊடுருவலுடன் தொடர்புடையதாக கூறப்பட்ட நிலையில், சர்வதேச எல்லையிலிருந்து 15 கி.மீ. தொலைவிற்குள் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையை அறிவித்தார். அந்தப் பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கவும், ஊடுருவல் மற்றும் பயங்கரவாத நிதியுதவிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.





