தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில், சில சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்புகள் போதிய முக்கியத்துவம் பெறவில்லை எனக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டி, விடுபட்டவர்களுக்கு விரிவான தனிப்பாடங்கள் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போதுள்ள பாடங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், வேலு நாச்சியார், திருப்பூர் குமரன் உள்ளிட்டோருக்கு விரிவான பாடங்கள் உள்ளன. ஆனால் கோவிந்தம்மாள், தியாகி என்.ஜி.ராமசாமி, எப்.ஜி.நடேச அய்யர் போன்ற பலரின் பங்களிப்புகள் பெயரளவிலோ அல்லது விடுபட்டோ இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

நாடக மேடைகளை தேசப்பற்று பிரசார அரங்கமாக மாற்றிய தியாகி விஸ்வநாத தாஸ், தேசபக்திப் பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலம் சுதந்திர உணர்வை பரப்பியதற்காக ஆங்கிலேயர்களால் பலமுறை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற தகவல்கள் பாடப்புத்தகங்களில் விரிவாக இடம்பெறவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.

கோவையைச் சேர்ந்த தியாகி என்.ஜி.ராமசாமி நெசவாலை தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்ததுடன், தொழிலாளர் உரிமை, தீண்டாமை ஒழிப்பு மற்றும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கங்களில் தீவிரமாக செயல்பட்டார் என கல்வியாளர்கள் நினைவூட்டினர். சிறை வாழ்க்கை மற்றும் உடல்நல பாதிப்புகளால் இளம் வயதிலேயே உயிரிழந்த இவரது தியாக வரலாறும் போதிய அளவில் இடம்பெறவில்லை என்றனர்.

திருச்சி நகர்மன்றத் தலைவராகவும் நாடகக் கலைஞராகவும் இருந்த எப்.ஜி.நடேச அய்யர் காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கங்களில் பங்காற்றியதாகவும், ஆனால் பள்ளி வரலாற்றுப் பாடங்களில் விரிவான இடம் இல்லை என்றும் கூறப்பட்டது. அதேபோல் மதுரையைச் சேர்ந்த பத்மாசனி அம்மாள், அந்நியத் துணி புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல் உள்ளிட்ட இயக்கங்களில் பங்கேற்று பெண்களை போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் என்றாலும் பெயரளவில் மட்டுமே இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தின் ‘ராணி லட்சுமிபாய் பெண்கள் படை’யில் இணைந்து செயல்பட்ட கோவிந்தம்மாள், நீதிபதி எஸ்.சுப்பிரமணிய அய்யர், அஞ்சலை அம்மாள், ருக்மணி லட்சுமிபதி, வெளிநாட்டில் இருந்து விடுதலைக்காக செயல்பட்ட செண்பகராமன் பிள்ளை உள்ளிட்டோரின் தகவல்கள் சுருக்கக் குறிப்புகளாக மட்டுமே உள்ளதாகவும், மாணவர்கள் முழுமையாக அறிய புதிய தனிப்பாடங்கள் மற்றும் விரிவான குறிப்புகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.