வாஷிங்டன்: அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிபர் டொனால்டு டிரம்பின் உருவம் இடம்பெறும் புதிய 250 டாலர் மதிப்புள்ள கரன்சி நோட்டுக்கான மாதிரி வடிவங்களை அமெரிக்க நிதித்துறை தயாரித்து வருகிறது.
அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் எந்த அதிபரின் படமும் இதுவரை டாலர் நோட்டில் இடம்பெற்றதில்லை. தற்போதைய சட்டம் உயிருடன் இருக்கும் நபரின் உருவத்தை கரன்சியில் இடம் பெற அனுமதிக்காததால், அந்த விதியை மாற்றும் சட்டத்திருத்த மசோதா பார்லிமென்டின் இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கரன்சி அச்சகப் பிரிவின் இயக்குநர் பாட்ரிசியா சோலிமென் சமீபத்தில் மாற்றப்பட்டதாகவும் செய்தி கூறுகிறது.
அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் 250 டாலர் நோட்டின் மாதிரி வடிவங்களை முன்கூட்டியே தயார் வைத்திருக்க அச்சகப் பிரிவிடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார். பார்லிமென்ட் ஒப்புதலுக்குப் பிறகே சட்டத்திற்கு உட்பட்டு இது செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
முன்மொழியப்பட்ட வடிவங்களில் ஒன்றை இறுதி செய்யும் பணியும் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





