வாஷிங்டன்: தற்காலிக விசாக்களில் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் நிரந்தர குடியுரிமைக்கான ‘கிரீன் கார்டு’ பெற விண்ணப்பிக்கும்போது, கட்டாயமாக சொந்த நாடு திரும்ப வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு (USCIS) விளக்கம் அளித்துள்ளது.
மே 21 அன்று வெளியான USCIS உத்தரவில், தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் நிரந்தர குடியுரிமை கோரும்போது தாய்நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டதாக தகவல் வெளியானது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த முறையில் மாற்றம் வருமோ என்ற அச்சம் காரணமாக, அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் மத்தியில் இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இப்போது வெளியிட்டுள்ள விளக்கத்தில், அனைத்து கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்ற பொதுவான கட்டாயம் இல்லை என்று USCIS கூறியுள்ளது. ஒவ்வொரு விண்ணப்பத்தின் தன்மையைப் பொறுத்து, செயல்முறையை அமெரிக்காவுக்கு வெளியே இருந்து முடிக்க வேண்டுமா இல்லையா என்பதை குடியேற்ற அதிகாரிகள் முடிவு செய்யும் அதிகாரம் நீண்ட காலமாகவே இருப்பதாகவும், முந்தைய அறிவிப்பு அந்த அதிகாரிகளுக்கான நினைவூட்டலாகவே வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், நிரந்தர குடியுரிமை கோரும் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் காலத்திலும் அமெரிக்காவிலேயே தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க பொருளாதாரம் மற்றும் தேசிய நலனுக்கு பங்களிக்கக்கூடிய தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் விதிவிலக்குகளும் வழங்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்தபடியே விண்ணப்பிக்கும் 50 ஆண்டுகளுக்கும் மேலான நடைமுறையில் மாற்றமில்லை என்றும், வழக்கம் போல அதிகாரிகள் ஆய்வுக்குப் பிறகு தகுதியை நிர்ணயிப்பார்கள் என்றும் USCIS தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா 14 லட்சம் கிரீன் கார்டுகளை வழங்கியதாகவும், அதில் 8.20 லட்சம் அட்டைகள் அமெரிக்காவில் இருந்தபடியே விண்ணப்பித்து பெற்றவை என்றும் தகவலில் கூறப்பட்டுள்ளது.





