அ.தி.மு.க.வைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்த விவகாரத்தில் ‘குதிரை பேரம்’ அல்லது ஏமாற்று வேலை நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தான் ஏற்கவில்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாற்றம் பல தரப்பிலும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த விமர்சனங்களின் கருத்திலிருந்து தாம் மாறுபடுவதாக கூறினார்.

2009ஆம் ஆண்டு ம.தி.மு.க. எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் அப்போது அ.தி.மு.க. அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து தி.மு.க.வில் இணைந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நிகழ்வை வைகோ நினைவூட்டினார். அன்றைய நடைமுறையைப் போலவே இன்றும் நடந்துள்ளதாகக் கூறிய அவர், இதைத் தாம் ஆதரிக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை என்றார்.

மேலும், ராஜபாளையம் மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளின் விவசாயிகள் பயன்பெறும் ‘உள்ளாறு’ திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், தென்காசி மாவட்டத்தில் உள்ள செண்பகவல்லி அணையை சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஜூன் 5ஆம் தேதி வாசுதேவநல்லூரில் தன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவித்தார்.