புதுடில்லி: பிளஸ் 2 மாணவர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் இணையத்தில் எளிதாக அணுகக்கூடிய வகையில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) ஒப்புக்கொண்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியான பின், மறுமதிப்பீடு மற்றும் மதிப்பெண் சரிபார்ப்புக்காக விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றியும், கணினி திரைவழி மதிப்பீடு (OSM) முறையையும் அறிமுகப்படுத்தியது. ஆனால் ஸ்கேன் தெளிவாக இல்லை, சில பதில்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை போன்ற தொழில்நுட்பக் குறைபாடுகள் இருப்பதாக மாணவர்கள் முன்பே புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொழில்நுட்பக் குளறுபடிகளுக்கு தானே பொறுப்பேற்பதாக கூறியிருந்தார். இதற்கிடையில், 19 வயது சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் நிசர்கா அதிகாரி, சி.பி.எஸ்.இ. பயன்படுத்திய அமேசான் கிளவுட் ஸ்டோரேஜ் அமைப்பில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக கடவுச்சொல் அல்லது அங்கீகாரம் இல்லாமலேயே விடைத்தாள்களை பார்க்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடிந்ததாக குற்றஞ்சாட்டினார்.

சமூக வலைதளங்களில் பரவிய ஸ்கிரீன்ஷாட்களில் மாணவர்களின் கையெழுத்து பிரதிகள், மதிப்பீட்டு தாள்கள், கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் மாணவர் விவரங்கள் பொதுவெளியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனங்களையும் முன்வைத்தன.

இதற்கு பதிலளித்த சி.பி.எஸ்.இ., குறைபாடுகளை சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், இத்தகைய புகார்களை அதிகாரப்பூர்வ வழிகளில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டது. சேவை வழங்குநரின் ‘ஆன்மார்க்’ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அரசு துறைகள் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் குழு உதவியுடன் மேலும் பாதுகாப்பான கட்டமைப்புக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. கண்டறியப்பட்ட குறைபாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; மற்ற பலவீனங்களும் ஆய்வு செய்து சரிசெய்யப்படுகின்றன என்றும் கூறியது.