திருச்சிக்கு வந்த முதல்வர் விஜயை, மதிமுக பொதுச்செயலர் வைகோவின் மகனும் திருச்சி எம்பியுமான துரை வைகோ வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் அந்தத் தொகுதியின் எம்பி என்பதாலேயே முதல்வரை வரவேற்றதாக கூறினார். இந்தச் சந்திப்பில் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை அளிக்கும் சூழல் அமையவில்லை என்றும், மீண்டும் சந்திக்கும் போது கோரிக்கைகளை முன்வைத்து அதைப் பத்திரிகையாளர்களுக்கும் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

பல திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மாநில அரசின் ஆதரவும் அவசியம் எனக் கூறிய அவர், அத்தகைய திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

புதிய அரசு பொறுப்பேற்ற பின் அதிகாரிகள் இடமாற்றம் நடைபெறுவது இயல்பென குறிப்பிட்ட அவர், புதிய அதிகாரிகள் பொறுப்பேற்ற பிறகு அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார். மாற்றத்தை விரைவில் தொடங்க முடிந்தாலும், முழுமையான மாற்றத்திற்கு சில மாதங்கள் தேவைப்படலாம் என்றும் கூறினார்.

குற்றச்சம்பவங்கள் முழுமையாகத் தடுக்க முடியாது; வளர்ந்த நாடுகளிலும் அவை நடக்கின்றன என்றார். ஆனால் வழக்குப்பதிவு மற்றும் குற்றவாளிகள் கைது செய்வதில் தாமதம் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் காலப்போக்கில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்தார். கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு எடுக்க ஜூன் 27-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதாகவும், நிர்வாகிகளுடன் ஆலோசித்து தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.