பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 100% எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் மாருதி சுசூகி அறிமுகம் செய்ய தயாராகின்றன.
ஹீரோ மோட்டோகார்ப் ஜூன் 3-ம் தேதி நாட்டின் முதல் 100% எத்தனால் மோட்டார் சைக்கிளை வெளியிட உள்ளது. தற்போது சந்தையில் உள்ள ‘பிளெக்ஸ்-ப்யூயல்’ வாகனங்கள் 85% வரை எத்தனால் கலவையில் இயங்கும் நிலையில், முழுமையாக எத்தனாலை மட்டுமே பயன்படுத்தும் முதல் இருசக்கர வாகனமாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எத்தனால் மோட்டார் சைக்கிள், ‘எச்.எப். டீலக்ஸ்’ மாடலை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசூகி, உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ல் நாட்டின் முதல் 100% எத்தனால் எரிபொருளில் இயங்கும் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த கார் வேகன்ஆர் அல்லது ப்ரான்க்ஸ் மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது நாட்டில் ‘இ-20’ எனப்படும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் புதிய வாகனங்கள் ‘இ-100’ எனப்படும் 100% எத்தனால் எரிபொருளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.





