தெற்கு லெபனானில் உள்ள 900 ஆண்டு பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘போபோர்ட்’ கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த கோட்டை லெபனானின் நபதியா நகரம் அருகே அமைந்துள்ளது.
மேற்காசியப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து போரைத் தொடங்கியதாகவும், அதற்கு எதிர்ப்பாக ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்.
12ஆம் நூற்றாண்டில் சிலுவைப் போர் காலத்தில் இந்த கோட்டை கட்டப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. 1982ல் லெபனானுடன் நடந்த போரின்போது இஸ்ரேல் இதை கைப்பற்றி ராணுவத் தளமாக பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டு இஸ்ரேலிய படைகள் லெபனானிலிருந்து முழுமையாக விலகியபோது கோட்டையையும் விட்டு வெளியேறின. தற்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கோட்டையை கைப்பற்றி தேசியக் கொடியை பறக்கவிட்டதாக கூறப்படுவதால், லெபனானில் போர் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





