சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழக காவல்துறையில் ஏற்கனவே உள்ள சிறப்பு பிரிவுகளையும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையையும் இணைக்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் டிஜிபி அனிதா ஹூசைன் தலைமையிலான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. இதனுடன் மகளிர் காவல் நிலையங்கள், மனிதர்கள் கடத்தல் தடுப்பு பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு, சிறார்கள் தொடர்பான சிறப்பு பிரிவு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ஐஜி பவானீஸ்வரி தலைமையில் ‘சிங்கப் பெண்’ என்ற சிறப்பு அதிரடிப்படை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போலீசார் மாநிலம் முழுவதும் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றங்களை கட்டுப்படுத்த ‘சிங்கப் பெண்’ படை அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காக கூட்டு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.





