மத்திய அரசின் மும்மொழி கொள்கை அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா (கே.வி.) பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் கற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு முதல் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கே.வி. பள்ளிகளிலும், சி.பி.எஸ்.இ. இணைப்பு பள்ளிகளிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கே.வி. பள்ளிகளில் 3 முதல் 9 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மூன்றாம் மொழியாக தமிழ் அல்லது சமஸ்கிருதம் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்து கற்க முடியும். எந்த மொழியை விருப்பமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்கள் விளக்கி, தேர்வு செய்யுமாறு கேட்டுள்ளனர்.

இதுவரை கே.வி. பள்ளிகளில் தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு தமிழ் கற்க வாய்ப்பு இல்லாத நிலையில், தற்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.