2026 மே மாதத்திற்கான நாட்டின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.94 லட்சம் கோடியாக இருப்பதாக அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகள் விநியோகம் அதிகரித்ததும், இறக்குமதியால் கிடைத்த வருமானம் உயர்ந்ததுமே இந்த வளர்ச்சிக்கான காரணங்களாக அரசு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் ரூ.1.88 லட்சம் கோடி வசூலான நிலையில், இந்தாண்டு மே மாத வசூல் 3.2% அதிகமாக உள்ளது.
மே 2026 வசூல் விவரங்களில் சிஜிஎஸ்டி ரூ.37,397 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.45,143 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.51,990 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி ரீபண்டும் 2.6% உயர்ந்து ரூ.27,281 கோடியாக உள்ளது.
இறக்குமதி மூலம் கிடைத்த மொத்த ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு மே மாதத்தை விட 19.1% உயர்ந்து ரூ.59,654 கோடியாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் ரூ.11,582 கோடி வசூலான நிலையில், இந்தாண்டு மே மாதத்தில் ரூ.9,834 கோடி மட்டுமே வசூலாகி 15% குறைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதங்களின் ஜிஎஸ்டி வசூல்: ஏப்ரல் 2026 – ரூ.2.43 லட்சம் கோடி, மார்ச் 2026 – ரூ.2.01 லட்சம் கோடி, பிப்ரவரி 2026 – ரூ.1.83 லட்சம் கோடி, ஜனவரி 2026 – ரூ.1.93 லட்சம் கோடி, டிசம்பர் 2025 – ரூ.1.74 லட்சம் கோடி, நவம்பர் 2025 – ரூ.1.70 லட்சம் கோடி.





