அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அரிய வானியல் நிகழ்வாக, மாசசூசெட்ஸ் வான்பரப்பில் நுழைந்த பெரிய விண்கல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
பகல் நேரத்திலேயே வானில் பிரகாசமான நெருப்பு பந்து தோன்றி மறைந்ததாகவும், சில நொடிகளில் பீரங்கி வெடிப்பைப் போன்ற பெரும் சத்தம் கேட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். பாஸ்டன், கேப் காட், நியூ ஹாம்ப்ஷயர், ரோட் தீவு உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு போன்ற உணர்வு ஏற்பட்டதால் சிலர் நிலநடுக்கமோ என அச்சமடைந்தனர்.
நாசா மற்றும் அமெரிக்க விண்கல் சங்கத்தின் தகவலின்படி, இது சுமார் 3 அடி அகலமும் கணிசமான எடையும் கொண்ட விண்வெளிப் பாறை. இது மணிக்கு சுமார் 1.20 லட்சம் கி.மீ. வேகத்தில் வளிமண்டலத்தில் நுழைந்து, சுமார் 64 கி.மீ. உயரத்தில் காற்று உராய்வை தாங்க முடியாமல் வெடித்து சிதறியது.
பாஸ்டன் நகரின் தெற்கு கடற்கரைப் பகுதி மீது ஏற்பட்ட பெரிய ஒளிர்வை கோஸ்-19 செயற்கைக்கோள் பதிவு செய்ததன் மூலம் விஞ்ஞானிகள் நிகழ்வை உறுதி செய்தனர். விண்கல் உயர்வளிமண்டலத்திலேயே சிதறியதால் தரையில் மனிதர்களுக்கும் கட்டடங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.





