நெதர்லாந்தில் இருந்து சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகள் இந்தியாவுக்கு மீண்டும் கிடைத்தது, நாட்டுமக்களுக்கு பெருமிதத்தை அளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மாதாந்திர வானொலி உரையான ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் அவர் இதை கூறினார்.

சமீபத்தில் நெதர்லாந்துக்கு சென்ற போது, அந்நாட்டு அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேடுகளை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்ததாகவும், அந்த நிகழ்வில் நெதர்லாந்து பிரதமரும் உடனிருந்ததாகவும் மோடி குறிப்பிட்டார். இந்த மீட்பு குறித்து வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருவதாகவும் அவர் கூறினார்.

மீட்கப்பட்டவை மொத்தம் 24 செப்பேடுகள் என்றும், அதில் 21 பெரிய செப்பு பட்டயங்களும் மூன்று சிறிய பட்டயங்களும் உள்ளன என்றும் மோடி விளக்கினார். நாகப்பட்டினத்தில் உள்ள புத்த சூடாமணி விஹாருக்கு ஆனைமங்கலம் கிராமத்தை தானமாக வழங்கும் அரசாணையுடன் இவை தொடர்புடையவை என்றார்.

ராஜராஜ சோழன் காலத்தில் தொடங்கிய அந்த ஆணை, பின்னர் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும், தந்தை அளித்த வாக்குறுதியை காப்பாற்றிய உறுதியை இவை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். மேலும், சோழர்களின் வெற்றிகள் மற்றும் சாதனைகளை விவரிக்கும் ‘மெய்கீர்த்தி’ குறிப்புகள், தமிழகத்துக்கும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கும் இடையிலான வணிக–தூதரக உறவுகள், சோழர் கால கடல்சார் போக்குவரத்தின் வலிமை ஆகிய தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அதே நிகழ்ச்சியில், கேரளாவில் இலவசமாக நீச்சல் கற்றுக் கொடுக்கும் முயற்சி, உத்தர பிரதேசத்தில் கங்கை டால்பின்களை காப்பாற்றும் ஆம்புலன்ஸ் சேவை, நதிகளைத் தூய்மைப்படுத்தும் இளைஞர்களின் பணிகள் ஆகியவற்றையும் பிரதமர் மோடி பாராட்டினார்.