நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, பார்லிமென்டில் பேசிய போது இந்தியா நேபாளத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதேபோல் நேபாளமும் சில இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறியதால் அந்நாட்டில் சர்ச்சை எழுந்துள்ளது.
நேபாள்–இந்தியா எல்லைப் பிரச்னை குறித்து பேசிய அவர், இந்த ‘இருதரப்பு ஆக்கிரமிப்பு’ விவரம் பிரதமர் ஆன பிறகே தெரிய வந்ததாக தெரிவித்தார். காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் தொடர்பாக இந்திய அரசுக்கு நேபாளம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.
இந்த எல்லைப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என வலியுறுத்திய ஷா, இந்தியா மற்றும் சீனாவுடன் மட்டுமல்லாமல் பிரிட்டன் அரசுடனும் பேசியுள்ளதாக தெரிவித்தார். பிரிட்டிஷ் இந்தியா விலகிய காலத்திலிருந்தே பிரச்னை நீடிப்பதால், பிரிட்டனும் தீர்வுக்கு ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே நேபாளத்தின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டார்.
மேலும், வரலாற்றாசிரியர்கள், நில அளவையாளர்கள் மற்றும் அந்தப் பகுதியை நன்கு அறிந்த வல்லுநர்கள் அடங்கிய குழுக்களை இரு அரசும் அமைத்து, ஆவணங்களை ஆய்வு செய்து பேச்சு மூலம் தீர்வை உருவாக்க வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.
ஆனால், ‘இந்திய நிலத்தையும் நேபாளம் ஆக்கிரமித்துள்ளது’ என்ற அவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. இதையடுத்து நேபாள வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்து, பிரதமர் குறிப்பிட்டது நாட்டின் எல்லை ஆக்கிரமிப்பை அல்ல; எல்லையோரப் பகுதிகளில் இரு நாட்டு விவசாயிகள் மாற்றி மாற்றிப் பயிர் நிலங்களைப் பயன்படுத்தும் நடைமுறையையே அவர் சுட்டியதாக தெரிவித்தது.





