அரசுப்பணி நியமனங்களுக்காக ஒருபோதும் லஞ்சம் பெறப்படாது; நியமனங்களில் மெரிட் முறை மட்டுமே பின்பற்றப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தகுதி அடிப்படையில், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என்றார். பணம் அல்லது பரிந்துரை அடிப்படையில் நியமனம் செய்யப்படாது என்றும் கூறினார்.

தகுதியில்லாதவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்வது இனி நடக்காது என அவர் வலியுறுத்தி, நியமனங்களில் லஞ்சத்திற்கு இடமில்லை என்று மீண்டும் உறுதி அளித்தார்.

மேகதாது விவகாரத்தில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை சட்டப்பூர்வமாகத் தடுப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்; அணை கட்டவிடமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

மேலும், திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதாலேயே அதிமுகவில் பிளவு ஏற்பட்டதாகவும், அதிமுகவினர் தவெகவுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தவெகவுக்கு பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை; தோழமை கட்சிகளின் ஆதரவுடன் தவெக அரசு முழு பலத்துடன் இருப்பதாகவும் கூறினார்.