பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசு துறைகளில் டெண்டர் கோருபவர்கள் முதல்வர் நிதி, முதல்வர் குடும்ப நிதி, கட்சி நிதி, அமைச்சர் நிதி, எம்.எல்.ஏ. நிதி போன்ற எந்தப் பெயரிலும் பணம் வழங்க வேண்டியதில்லை என்று அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

கோவையில் பேசிய அவர், நெடுஞ்சாலைத்துறை சாலை அமைப்பை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் சாலை பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி செயல்படுவதாக கூறினார். தமிழகத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் சுமார் 18 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்டு, உயிரிழப்புகளை கணிசமாக குறைக்கவும் அதற்கென பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிக வேகம், யூ-டேர்ன் பகுதிகளில் சரியான சிக்னல் இல்லாமை, ஊராட்சி சாலைகள் மாநில/தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் இடங்களில் பாதுகாப்பு குறைவு ஆகியவை விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக அவர் கூறினார். வேகக் கட்டுப்பாடு, அபராத நடைமுறை, விழிப்புணர்வு உள்ளிட்ட கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், சாலை பாதுகாப்புக்கான சட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

நீலாம்பூர்–மதுக்கரை புறவழிச்சாலையில் சுமார் 600 விபத்துகள் நடந்துள்ளதுடன், கோவையில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார். கேரள எல்லை வரை சாலையை விஸ்தரிப்பது குறித்து ஆய்வு நடப்பதாகவும், ஜி.டி. நாயுடு மேம்பாலம் முடியும் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நீலாம்பூர் வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு பாலத்தை நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை நெடுஞ்சாலைகளில் ‘பேட்ரோல்’ அதிகரிக்கப்படும் என்றும், விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகளில் சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். கடந்த கால டெண்டர்கள் மறுஆய்வு செய்யப்படுவதாகவும், கடந்த ஓராண்டில் கோரப்பட்ட டெண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரச்னைக்குரிய பாலங்கள் ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்கள் மூலம் மறுதணிக்கைக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், நெடுஞ்சாலைத்துறையில் சுமார் 2,000 காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறி, காலியிடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.