புதுடில்லி: நீட் தேர்வின் நேர்மையை குலைத்ததாக கூறப்படும் ‘கல்வி மாபியா’ மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதியாக இருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும், வினாத்தாள் கசிவு நடந்தது உண்மை என்றும் அவர் ஒப்புக்கொண்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான அனைத்து வழக்குகளும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் என பிரதான் தெரிவித்தார். கசிவில் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரத்தில் தேசிய தேர்வுகள் முகமை (NTA) தோல்வியடைந்ததாகவும் அவர் ஏற்றுக்கொண்டார். இதே நேரத்தில், சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் தொழில்நுட்பச் சிக்கல்கள் உள்ளிட்ட பல பிரச்னைகள் இருப்பதாக கூறி, அவை ஐஐடி நிபுணர்களின் உதவியுடன் சரிசெய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த பிரச்னைகளை தீர்க்க சிபிஎஸ்இக்கு நிபுணர்கள் குழு உதவி செய்து வருவதாகவும், 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடைத்தாள் நகல்களை பெற்றுள்ளதாகவும், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி நாட்டை அவமதிப்பதாகவும் பிரதான் குற்றம்சாட்டினார்.





