சென்னை: “நான் ஒரு வார்த்தை கேட்டிருந்தால், முதல்வர் விஜய் வீடு தேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” என்று தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா கூறினார்.

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் பேசினார். சட்டசபை தேர்தல் முடிவு “சுனாமி போன்றது” என்றும், மாநிலத்தில் தற்போது நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் மக்களை சிந்திக்க வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தே.மு.தி.க. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்ததாகவும், அந்த கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார். புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள கட்சிக்கு ஆறு மாதங்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பதவிகளுக்காக “சோபா செட்” ஆசை இல்லை; தேர்ந்தெடுத்த கூட்டணிக்கு விசுவாசமாக இருப்போம் என கூறிய அவர், 2024 மக்களவை தேர்தலில் சுயநலத்துக்காக அ.தி.மு.க. கூட்டணியை விட்டு சென்றவர்கள் சட்டசபை தேர்தலில் மரியாதை பெற்றதாகவும், ஆனால் கூடவே நின்றவர்களுக்கு பழனிசாமி அதே மரியாதை தரவில்லை என்றும் விமர்சித்தார்.

மேலும், தே.மு.தி.க.வை “ஐ.சி.யூ. கட்சி” என பழனிசாமி விமர்சித்ததை நினைவூட்டி, இன்று அவரது கட்சியே “ஐ.சி.யூ.”க்கு சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.