சட்டசபை தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய கட்சி தலைமையால் நியமிக்கப்பட்ட ஐவர் உண்மை கண்டறியும் குழு, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் காங்கிரசாரிடம் கருத்து கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டு, 23 இடங்களில் தோல்வியடைந்தது. இந்த பின்னடைவை ஏற்படுத்திய காரணங்களை கண்டறிய முன்னாள் எம்.பி. ஜெயகுமார் உள்ளிட்ட ஐவர் குழுவை கட்சி தலைமை அமைத்துள்ளது.

இந்த குழுவின் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது வடசென்னை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் திரவியம் ஆதரவாளர்கள் மற்றும் தற்போதைய தலைவர் மதர்மா கனி ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், கட்சி நிர்வாகிகள் தலையிட்டு சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியடைந்த 23 தொகுதிகளிலேயே கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என சில நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர். மற்ற தொகுதிகளில் கூட்டம் நடத்தினால் உட்கட்சி கோஷ்டி பூசல் தீவிரமடைந்து, மீண்டும் அடிதடி சம்பவங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், 234 தொகுதிகளுக்கும் குழு செல்ல வேண்டுமெனில் வாகனங்களுக்கு பெட்ரோல் செலவு, சத்தியமூர்த்தி பவனில் தனி அறை உள்ளிட்ட வசதிகளை கட்சி தலைமையிடம் குழு தரப்பு கோரியுள்ளதாகவும், இதுவும் எதிர்ப்பை அதிகரித்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.