நாடு முழுவதும் காலியாக உள்ள 26 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. ஜூன் 8 மனுத் தாக்கலுக்கான கடைசி நாள்; ஜூன் 9 அன்று மனுக்கள் பரிசீலிக்கப்படும்; ஜூன் 11 வரை வாபஸ் பெறலாம்.

போட்டி ஏற்பட்டால் ஜூன் 18 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதே நாள் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழகத்தில் இந்த இடைத்தேர்தல், அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மே 7 அன்று ராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட காலியிடத்துக்காக நடைபெறுகிறது. அவரது பதவிக்காலம் 2028 ஜூன் 29 வரை இருந்த நிலையில், மயிலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதால் ஒரே நேரத்தில் இரு பதவிகளில் இருக்க முடியாது என்ற காரணத்தால் அவர் பதவியை விலகினார்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான த.வெ.க.க்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகவும், ஆதரவு கட்சிகளுடன் சேர்த்து 121 வரை ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் த.வெ.க. நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி எனக் கணிக்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தல் மூலம் த.வெ.க. சார்பில் முதல் ராஜ்யசபா எம்.பி. தேர்வாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜோதிடர் ரத்தன் பண்டிட் அல்லது விஷ்ணு ரெட்டி ஆகியோரில் ஒருவர் தேர்வாகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும், காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்திக்கு அந்த இடத்தை கோரலாம் என்ற பேச்சும் உள்ளது. ஆனால் அந்த இடத்தை வழங்குவதற்கு த.வெ.க. நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுவதால், விஜய் எடுக்கும் முடிவு அரசியல் வட்டாரங்களில் கவனமாக பார்க்கப்படுகிறது.