திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க, முதல்வர் விஜய் இன்று திருச்சி செல்ல உள்ளார்.
சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 233 தொகுதிகளில் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
திட்டமிட்டபடி, சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் திருச்சி வரும் அவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணிக்கு நடைபெறும் நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் ‘கியூஆர்’ குறியீடு கொண்ட நுழைவுச்சீட்டு வழங்கப்பட்ட 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்; மற்றவர்கள் வர வேண்டாம் என கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது வைத்த வேண்டுதல்கள் நிறைவேறியதால் புனித அந்தோணியார் சர்ச்சில் நேர்த்திக்கடன் செலுத்தவும் அவர் செல்லக்கூடும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி இன்று திருச்சி மாநகரில் ட்ரோன்கள் பறக்க கலெக்டர் பிரதீக் தயாள் தடை விதித்துள்ளார். விதிமீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.





