அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலர் ராஜ் சத்யன், ‘இளைஞர்களுக்கு வழி விடுங்கள்’ எனக் கூறி வெளியிட்ட கருத்து, கட்சிக்குள் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரம், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி இணை செயலர் மகேந்திரன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து எழுந்தது. சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கிய மகேந்திரன் மரணம், கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
‘எக்ஸ்’ தளத்தில் ராஜ் சத்யன் வெளியிட்ட பதிவில், தேர்தல் தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையுடன் உழைக்கும் கட்சிக்கு எதிராக சிலரின் நடவடிக்கைகள் இருந்ததால், இன்று ஒரு “தூய தொண்டரை” இழந்ததாக குறிப்பிட்டார். மேலும், தொண்டர்களின் மனநிலையை சிந்தித்திருந்தால் இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும், இனி தொண்டர்கள் மனவேதனை அடைய விடக்கூடாது என்றும் கூறி, வருங்கால இளைஞர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த பதிவுக்கு கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், ராஜ் சத்யன் பின்னர் அந்த பதிவை நீக்கினார்.
அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், த.வெ.க. வருகைக்குப் பிறகு இளைஞர்கள் மத்தியில் அரசியல் உணர்வு அதிகரித்தாலும், அதை அதிமுக பக்கம் திருப்பத் தெளிவான திட்டம் இல்லை என்றனர். மேலும், கட்சியில் மாவட்டச் செயலர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளின் சராசரி வயது அதிகமாக இருப்பதாகவும், பல இளம் முகங்களுக்கு சார்பு அணிகளைத் தாண்டி முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தனர். இளைஞர்களை இணைக்காமல் வெற்றி பெற முடியாது என்ற இளம் நிர்வாகிகளின் மனக்குமுறலே இந்த பதிவில் வெளிப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.





