தமிழ்நாடு சட்டசபை செயலாளர் சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனிவாசன் 2023ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற வேண்டிய நிலையில் இருந்தார். ஆனால் அவருக்கு மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. பணி நீட்டிப்பு காலம் இன்னும் தொடர்ந்திருந்த போதிலும், அவர் தற்போது பதவியிலிருந்து விலக முடிவு செய்து, அதற்கான ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளார்.

சட்டசபை பணிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட அவருக்கு, தற்போதைய பணிக்காலம் முடிவடைய இன்னும் சுமார் மூன்று மாதங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

2018ஆம் ஆண்டு முதல் சட்டசபை செயலாளராக பணியாற்றி வந்த சீனிவாசன், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்காலங்களிலும் அதே பதவியில் தொடர்ந்தார். அவர் ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.