பெங்களூரு: கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கார் அணிவகுப்பு செல்ல வசதியாக போக்குவரத்தை நிறுத்தியதை எதிர்த்து, பழைய விமான நிலைய சாலையில் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலை மங்களூரிலிருந்து விமானம் மூலம் எச்.ஏ.எல். விமான நிலையம் வந்த கவர்னர், அங்கிருந்து ராஜ்பவனுக்கு செல்லும் வழியில் எந்த தடையும் இல்லாமல் செல்ல ‘ஜீரோ டிராபிக்’ முறை அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக பழைய விமான நிலைய சாலையில் வாகனங்களை போக்குவரத்து போலீசார் 30 நிமிடத்துக்கும் மேலாக நிறுத்தி வைத்தனர். இதனால் அதிருப்தியடைந்த ஒருவர் காரிலிருந்து இறங்கி சாலையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார்.

அங்கு வந்த பாதுகாப்பு போலீசார் அவரை எழுந்து செல்லுமாறு கூறினர். அதற்கு அவர், “கவர்னர் மட்டும் வி.ஐ.பி.யா? நானும் வி.ஐ.பி. தான். விமானம் தரையிறங்குவதற்கு முன்பே வாகனங்களை நிறுத்துவது ஏன்? என் மனைவி கர்ப்பிணி; காருக்குள் இருக்கிறார். ஏதாவது நடந்தால் யார் பொறுப்பு?” என கேள்வி எழுப்பினார்.

தூரத்தில் கவர்னர் கார் அணிவகுப்பு வருவதை கவனித்த போலீசார், அவரை சமாதானப்படுத்தி சாலையிலிருந்து அழைத்துச் சென்றனர். மேலும், இனி இதுபோல் செய்யக்கூடாது என எச்சரித்தனர். சம்பவத்தை அங்கிருந்தவர்கள் மொபைலில் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, சிலர் போராட்டக்காரருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.