சென்னை தலைமை செயலகத்தில் மனிதவள மேலாண்மை துறையில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு, விரல் ரேகை மற்றும் முக அடையாளத்தை பதிவு செய்யும் ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் 41 துறைகளுக்கான அமைச்சர்கள் மற்றும் செயலர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தும், தாமதமாக வருதல் மற்றும் ‘ஆய்வு’ என்ற பெயரில் வெளியே செல்வது போன்ற காரணங்களால் பணிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் வெளி மாவட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முக்கிய பணிகளுக்காக வந்தபோது அவதிக்கு ஆளாகும் நிலை உருவாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகையை துல்லியமாக கண்காணித்து நிர்வாகத்தை நெறிப்படுத்தும் நடவடிக்கையாக இந்த முறை கொண்டு வரப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்காக துறை அலுவலக நுழைவாயில் அருகே முகப்பதிவுடன் கூடிய பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மனிதவள மேலாண்மை துறை அதிகாரி ஒருவர், நவீன டிஜிட்டல் முறையில் வருகையை கண்காணிக்க இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மனிதவள மேலாண்மை துறையில் தொடங்கியுள்ள இந்த நடைமுறை, நடப்பாண்டு இறுதிக்குள் அனைத்து துறைகளிலும் செயலாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





