சென்னை: தமிழக பா.ஜ. நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் கிண்டி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்டதை அறிந்த பின், கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் கடும் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில், தொண்டர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்த பா.ஜ. தலைமை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 21 முதல் ஜூலை 21 வரை மண்டல அளவிலான பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளன.
இதற்கான முன்னோட்டமாக, கடந்த மே 29-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தமிழகம், கேரளா, புதுச்சேரி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கட்சியின் முன்னாள் தேசிய இணை பொதுச்செயலரும் பயிற்சி முகாம்கள் பொறுப்பாளருமான சதீஷ், தேசிய பொதுச்செயலர் தருண் சுக், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
பொதுவாக பா.ஜ. பயிற்சி முகாம்கள் மாலையில் தொடங்கி அடுத்த நாள் மாலை முடியும் வகையில், பள்ளி/கல்லூரி அல்லது மைதானம் உள்ள திருமண மண்டபங்களில் நடத்தப்படும். அதிகாலை 5 மணிக்கு எழுந்து இரண்டு மணி நேர உடற்பயிற்சி உள்ளிட்ட ஒழுங்குமுறைகளுடன் நிர்வாகிகள் ஒன்றாக தங்கி கட்சிப் பணிக்கான திட்டமிடல் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் கிண்டி நிகழ்வு கருத்தரங்கம் போல நடந்ததாகவும், இதில் பங்கேற்ற சில மாநில நிர்வாகிகள் ‘பல ஆண்டுகளாக முகாம்களுக்கு வருகிறோம்; பலன் இல்லை’ என கிண்டல் செய்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.
இதையடுத்து, பயிற்சி முகாம்கள் வழக்கமான முறையில் நடைபெற வேண்டும் என்றும், நட்சத்திர ஹோட்டலில் நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் கூறி, இனி இதுபோல் நடக்கக் கூடாது என நிதின் நபின் கண்டித்ததாக பா.ஜ. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.





