சென்னை: மத்திய அரசின் விருதை பெற டில்லி செல்ல தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில் திட்டமிடப்பட்டிருந்த 55 பேர் பயணம், செய்தி வெளியானதைத் தொடர்ந்து 6 பேராக குறைக்கப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பு, சுகாதாரம், குழந்தைகள் நலன், பெண்கள் நலன், தண்ணீரில் தன்னிறைவு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் ஊராட்சிகளுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாவட்ட பஞ்சாயத்து விருது கோவைக்கு கிடைத்துள்ளது.

இந்த விருது வழங்கும் விழா டில்லி பாரத் மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது. முதலில், தமிழக ஊரக வளர்ச்சி துறையைச் சேர்ந்த 29 அதிகாரிகள் மற்றும் 26 மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 55 பேர் அரசு செலவில் டில்லி செல்ல திட்டமிடப்பட்டிருந்தனர்.

மே 29 அன்று வெளியான செய்தி மத்திய ஊரக துறை பொருளாதார ஆலோசகர் கவனத்திற்கு சென்றதையடுத்து, இத்தகைய நிகழ்ச்சிகளில் ஐந்து பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அவர் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பேரில், டில்லி செல்லும் பட்டியல் 55 இலிருந்து 6 ஆக மாற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஊராட்சி சிறப்பு அதிகாரி சங்கீத் பல்வந்த் வாகே விருதை பெறவுள்ளார். அவருடன், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர்கள் இருவர் உட்பட மேலும் ஐந்து பேர் செல்கிறார்கள்.