சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்டணம் செலுத்திய தி.மு.க. உறுப்பினர்கள், அந்தத் தொகையை திருப்பித் தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

சட்டசபை தேர்தலுக்கு முன், 234 தொகுதிகளிலிருந்தும் போட்டியிட விரும்புவோரிடம் தி.மு.க. விருப்ப மனுக்களை பெற்றது. விண்ணப்பப் படிவத்திற்கு ரூ.1,000 கட்டணமும், பொதுத் தொகுதிக்கு ரூ.25,000 மற்றும் மகளிர்/தனித் தொகுதிகளுக்கு ரூ.15,000 என விருப்ப மனு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் 30 சட்டசபை தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதன் மூலம் ரூ.23 கோடிக்கு மேல் வசூலானதாக கூறப்படுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் விருப்ப மனு கட்டணம் செலுத்தியவர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் என தி.மு.க. தலைமை முன்பே அறிவித்திருந்தது. தேர்தல் முடிந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், அந்தத் தொகுதிகளுக்காக கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது மீண்டும் பணத்தை திருப்பித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.