சென்னை: சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்து ஆட்சியை இழந்த நிலையில், கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலர் துரைமுருகன் உள்ளிட்ட பலரும் தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், தூத்துக்குடியில் நடந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில், துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி. மாநில அரசியலுக்கு வந்து கட்சி வளர்ச்சிக்கு துணையாக இருக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகி கதிரவன் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், கனிமொழிக்கு மாநில அரசியலில் முக்கியப் பொறுப்பு வழங்கினால் பெண்கள் வாக்குகளை கவர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தி.மு.க. மகளிர் அணி சார்பில் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை ஆர்.ஏ.புரத்தில் நாளை மாலை 5 மணிக்கு, தேர்தல் களத்தில் உழைத்த பெண்களுக்கு பாராட்டு விழா கனிமொழி தலைமையில் நடைபெறுகிறது.
மேலும், ஜூன் 13-ஆம் தேதி கட்சி தலைமையகம் அறிவாலயத்தில் தேர்தல் தோல்வி குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது; இதில் ஸ்டாலின் மற்றும் கனிமொழி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தோல்வியிலிருந்து மீண்டு மகளிர் அணியை பலப்படுத்தி, பின்னடைவை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என மகளிர் அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.





