சென்னை வானிலை ஆய்வு மையம், கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
அறிக்கையில், நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் திருமல்வாடி மற்றும் வெள்ள கவுண்டன்பாளையம் பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதும், தென்கிழக்கு அரபிக் கடலை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல சுழற்சி நிலவுவதும் இந்த மழை வாய்ப்புக்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தின் சில இடங்களிலும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஜூன் 7 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.





