மாதம் ரூ.4 ஆயிரம் அளவிலான சம்பளத்தில் வீட்டு வேலை செய்த கலிதா மாஜி, தற்போது மேற்கு வங்க மாநில அமைச்சராக பதவியேற்றுள்ளார். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அவர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

37 வயதான கலிதா மாஜி, பாஜ சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளரை 12,535 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து எம்எல்ஏ ஆனார். அவர் போட்டியிட்ட ஆஸ்கிராம் தொகுதியில் அவருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2006ஆம் ஆண்டு பிளம்பர் வேலை செய்து வந்த ஒருவரை அவர் திருமணம் செய்துகொண்டார். குஸ்காரா பகுதியில் பல ஆண்டுகள் வீட்டு வேலைக்காரியாக இருந்து சுத்தம் செய்தல், சமையல், பராமரிப்பு போன்ற பணிகளை செய்து வந்ததாகவும், அந்த காலத்தில் மாதம் ரூ.4 ஆயிரம் வருமானம் ஈட்டியதாகவும் தகவல் தெரிவிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் பயணம் தமக்கு ஊக்கமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பதவியேற்ற பின் பேசிய கலிதா மாஜி, வீட்டு வேலை செய்தபோதும் பாஜ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றதாக தெரிவித்தார். தண்ணீர் பற்றாக்குறை, சுகாதார மையம் இல்லாமை, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை முக்கிய பிரச்சினைகள் எனக் குறிப்பிட்டு, எம்எல்ஏவாக தனது முதல் பணியாக மருத்துவமனை அமைப்பதை முன்னுரிமை அளிப்பதாக கூறினார்.

மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாணவிகள் காடுகளை கடந்து செல்ல வேண்டியதால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தன்னைப் போன்ற ஏழை மக்களுக்காக பணியாற்ற விரும்புவதாகவும், ஊழலற்ற ஆட்சி மற்றும் பின்தங்கிய மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.