காத்மாண்டு: இந்திய எல்லைப் பகுதிகளில் நேபாளமும் சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நேபாள பிரதமர் பாலேந்திர ஷா பார்லிமென்டில் கூறியதைத் தொடர்ந்து அந்நாட்டில் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. அவரது கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தியா–நேபாளம் 1,751 கி.மீ. நீளமான எல்லையை பகிர்ந்து கொள்கின்றன; உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் நேபாள எல்லையை ஒட்டி உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1816ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் காளி நதி இரு நாடுகளின் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

இருப்பினும் காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா பகுதிகள் குறித்து நேபாளம் தொடர்ந்து உரிமை கோரி வருவதுடன், இதுதொடர்பாக தன் நாட்டின் வரைபடத்தையும் திருத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைலாஷ்–மானசரோவர் புனித யாத்திரை இந்தப் பகுதிகள் வழியாக நடைபெறுவதால், எல்லைப் பிரச்னை நீண்டகாலமாக தொடரும் நுணுக்கமான விவகாரமாக உள்ளது.

பிரதமராக பொறுப்பேற்ற பின் நடந்த முதல் பார்லிமென்ட் உரையில், இந்தியா நேபாள எல்லையை ஆக்கிரமித்ததாக நீண்டகாலமாக பேசப்படுவதாகவும், ஆனால் நேபாளமும் பல இடங்களில் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்து இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் பேச்சுவார்த்தை, வரலாற்று ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், எல்லை ஆங்கிலேயர் காலத்தில் வகுக்கப்பட்டதால் பிரிட்டனையும் பேச்சில் சேர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்ச்சை பெரிதான நிலையில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிரதீப் கியாவாலி மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்து நேபாள வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில், தீர்க்கப்படாத எல்லைப் பகுதிகள், எல்லை தாண்டிய ஆக்கிரமிப்புகள் மற்றும் சர்ச்சைக்குரிய மண்டலங்கள் குறித்து மட்டுமே பிரதமர் குறிப்பிட்டதாகவும், நேபாளத்தின் எல்லை கோரிக்கைகளை அதிகாரப்பூர்வமாக விட்டுக் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தது.