பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பது “காலத்தின் கட்டாயம்” என வலியுறுத்தும் ஆய்வறிக்கையை முதல்வர் விஜயிடம் சமர்ப்பிக்க விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. திட்டம் தொடர்பான சர்ச்சைகள் நீடிக்கும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையம் தினமும் 60,000க்கும் மேற்பட்ட பயணிகளை கையாளுகிறது; மூன்று முனையங்களுடன் இயங்கி வரும் இங்கு தினசரி 400க்கும் மேற்பட்ட விமான நகர்வுகள் உள்ளன. ஆனால் ஓடுபாதை இயக்க சிக்கல்கள், மேம்பாட்டுக்காக கூடுதல் நிலம் கையகப்படுத்த முடியாத நிலை மற்றும் வளர்ச்சி பணிகளில் தாமதம் ஆகிய காரணங்களால் அடுத்தகட்ட விரிவாக்கம் கேள்விக்குறியாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த தி.மு.க. அரசு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5,600 ஏக்கரில் இரண்டாவது விமான நிலையத்தை திட்டமிட்டது. அரசு நிலங்களைத் தவிர்த்து சுமார் 3,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கின; கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,700 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு த.வெ.க. ஆட்சி அமைந்த நிலையில், நில எடுப்பு பணிகளை தமிழக அரசு நிறுத்தியுள்ளதுடன், அங்கு சிப்காட் தொழில் பூங்கா அமைக்கலாமா என்பதையும் பரிசீலித்து வருகிறது.
இந்த மாதத்தில் சென்னை வரும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், முதல்வரை சந்தித்து ஆய்வறிக்கையை வழங்க திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் விமானப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக உயர்வதால் தற்போதைய கட்டமைப்பு போதாது; பல சர்வதேச நாடுகளுக்கு நேரடி சேவைகளை விரிவுபடுத்துவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன என அவர்கள் கூறுகின்றனர்.
ஆணையத்தின் விளக்கப்படி, பரந்தூரில் அதிநவீன ஓடுபாதைகள் மற்றும் அகலமான வான்வெளித் தளங்கள் அமைக்கப்படுவதால் பயணிகள் திறன் உயரும்; விமான நிறுவனங்கள் புதிய சேவைகளை விரிவுபடுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும்; ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு நேரடி விமானங்களை இயக்கவும் சாத்தியம் உருவாகும். மேலும், அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், நில அமைப்பியல், சுற்றுச்சூழல் தாக்கம், போக்குவரத்து இணைப்பு உள்ளிட்ட ஆய்வுகள் முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தைச் சுற்றி ‘ஏரோட்ரோபாலிஸ்’ அமைப்பை உருவாக்கி சரக்கு போக்குவரத்து மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை உயர்த்த திட்டமுள்ளதாக கூறிய அதிகாரிகள், முழுமையான திட்ட அறிக்கையை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.




