சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கடும் துர்நாற்றத்துடன் புகைமூட்டம் பரவி, அங்கு இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் வருகையாளர்கள் பலர் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை தெரிவித்தனர்.
அருகிலுள்ள சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர். துறைமுகத்திலிருந்து புகை வந்ததாக பலர் புகார் தெரிவித்த நிலையில், புகைமூட்டம் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் புகை எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்து, துறைமுகம் அருகே கொட்டப்பட்டிருந்த கந்தகம் கடும் வெயிலால் தீப்பற்றியதே காரணம் என உறுதிப்படுத்தினர். உடனடியாக அங்கு சென்ற தீயணைப்பு படையினர் கந்தகத்தின் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து புகை வெளியேறாமல் தடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதையடுத்து புகைமூட்டம் குறைந்து, தலைமைச் செயலகத்தில் இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.





