சென்னையில் டாக்டர்கள், கோடை காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடிக்காவிட்டால், வீட்டிலேயே இருந்தாலும் மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர்.

வெயில் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளுக்கான சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன; மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வெப்பவாத பாதிப்புக்கான சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி கூறுகையில், வெயில் காலத்தில் தண்ணீர், மோர், கஞ்சி, இளநீர் போன்ற திரவங்களை போதுமான அளவில் அருந்துவது உடலுக்கு நன்மை தரும் என்றார். வெளியே செல்வோர் மட்டுமல்ல; வீட்டில் இருப்பவர்களுக்கும் வெப்ப அலை காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்படும் என்பதால், அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தாகம் அதிகமாக இல்லை என்பதால் சிலர் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பதாகவும், உடலில் நீர்ச்சத்து குறையும்போது ரத்த உறைதல் ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் வரக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். குளிர், மழைக் காலத்தை விட கோடையில் இவ்வகை உயிரிழப்புகள் அதிகம் எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக முதியோர் போதுமான அளவு நீர் அருந்துவதன் மூலம் உயிரிழப்பு அபாயத்தை குறைக்க முடியும் என்றார்.